பாலஸ்தீனிய ஹம்மாஸ் இயக்கம் தீவிரவாதிகளா? போராளிகளா?

Written By:A.Sadam husain hasani


முன்னுரை:

இந்த கட்டுரை முற்றிலும் இஸ்ரேலிய சியோனிஸ்ட்கள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளால் தீவிரவாத முத்திரை குத்தப்படும் பாலஸ்தீனிய ஹம்மாஸ் அமைப்பினர் குறித்து விவரிப்பதையே நோக்கமாக கொண்டதாகும்;என்றாலும் இந்த தலைப்பை தெளிவாக புரிந்து கொள்ள சில அடிப்படைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுப்பார்வையில் தீவிரவாதம் எப்படி பார்க்கப்படுகின்றது என்பது சம்மந்தமாகவும் அவை எப்படி பிரகடணப்படுத்தப்படுகின்றது என்பது சம்மந்தமாகவும் இன்னும் அரச பயங்கரவாதங்களின் நிஜ உலகம் என்ன என்பது சம்மந்தமாகவும் மக்கள் போராளிகளின் நிழல் உலகம் என்ன  என்பது சம்மந்தமாகவும் பொதுவான சில விஷயங்களை விவரித்திருக்கின்றேன். 

நிச்சயம் இந்த கட்டுரை மனித மான்பை நடுநிலையோடு போற்ற நினைப்பர்களுக்கு எவ்வித சிக்கலையும் தராது என்றும்,அவ்வாறே தீவிரவாதத்திற்கும் மக்கள் போராட்டத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை தெளிவாக புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு தெளிந்த பார்வையை கொடுக்கும் என்றும் ஆதரவு வைத்து கட்டுரைக்குள் அடியெடுத்து வைக்கின்றேன்.

நாம் எல்லோரும் தீவிரவாதிகள்தான்:

எது தீவிரவாதம் ? யார் தீவிரவாதிகள்?என்ற கேள்விக்கு நாம் பதில் தேட புறப்பட்டால் இந்த உலகில் பிறரை அநியாயமாக அடக்குமுறைக்குள்ளாக்கும் தீவிரவாத செயலைவிட்டும் ஒருவர் கூட விதிவிலக்காக முடியாது என்றே நான் கருதுகின்றேன்.(அதாவது யாரும் இங்கு யோக்கியர்கள் அல்ல.)அந்தளவிற்கு இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நிலையில் மதத்தாலோ அல்லது இனத்தாலோ அல்லது பாலினத்தாலோ அல்லது பொருளாதாரத்தாலோ தீவிரவாதிகளாகவே உலா வருகின்றோம் என்ற கசப்பான உண்மையை விரும்பியோ விரும்பாமலோ நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.ஏனெனில் அடுப்படி தொடங்கி அலுவல் வரையிலும் சக மனிதன் மற்றொரு மனிதனை அடக்குமுறைக்குள்ளாக்கும் தீவிரவாதம் இந்த மனித சமூகத்தின் எந்த சதைத்துண்டையும் அழுக்காக்காமல் விட்டு வைக்கவில்லை என்பதாகவே நான் காண்கின்றேன்.

அத்தகைய தீவிரவாதத்தாலேயே குடிக்கும் தண்ணீரிற்கு சண்டை! வசிக்கும் நிலத்திற்கு சண்டை!ஓடும் ரயிலுக்கு சண்டை என்று இந்த மனித சமூகத்தின் இரத்த வரலாறு எல்லையற்று விரிவடைந்து கொண்டே செல்வதாக என்னால் காண முடிகிறது. இவற்றிற்கிடையில் மதத்திற்காக போடப்பட்ட சண்டைகளை கணக்கிட்டுப் பார்த்தால் இந்த மனித சமூகத்தின் பெரும் பகுதி அதற்காகவே அழிந்தொழிந்து போனதாக முந்தைய வரலாறுகள் நம்மை பார்த்து பல் இழிக்கின்றது.

ஆக இப்படி சக மனிதனின் மீது எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி தொடுக்கப்படும் தீவிரவாதம் இந்த மனித சமூகத்தில் ஒவ்வொருவரையும் ஆட்கொண்டுதான் இருக்கின்றது என்பதை நம் ஒவ்வொருவரின் மனதிலும் மிக ஆழமாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதையே முதற்கண் இங்கு நான் பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன்.

அடுத்தபடியாக உண்மையில் எது தீவிரவாதம் என்பது சம்மந்தமாக விவரிப்பது இந்த கட்டுரையின் தலைப்பை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்வதற்கு மிக உதவியாக இருக்கும் என்று கருதுகின்றேன்.எனவே வாருங்கள் அது சம்மந்தமாக சில விவரங்களை இங்கு பார்த்துவிடுவோம்.

உண்மையில் எது தீவிரவாதம்?

இன்றைய கால சூழ்நிலையை பொறுத்தமட்டில் தீவிரவாதம் என்பது குறிப்பிட்ட ஒரு அரசிற்கு எதிராக நடத்தப்படும் ஆயுத தாக்குதல்கள் அல்லது சைபர் அட்டாக் என்று சொல்லப்படக்கூடிய தகவல் திருட்டு போன்றவற்றையே பெரும் அளவிலான தீவிரவாத செயலாக எல்லா நாடுகளிலும் ஏகோபித்து குறிப்பிடப்படுகின்றது.மேலும் இத்தகைய தாக்குதல்கள் பொது மக்களின் வாழ்வை கெடுக்கவும், அவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும், அமைதியான ஒரு ஆட்சியை கெடுக்கவும் வழிவகுப்பதால் கடுமையான தீவிரவாத செயலாக அல்லது பயங்கரவாத செயலாகவே அனைத்து நாடுகளாலும் இவை பார்க்கப்படுகின்றது. 

அவ்வாறே இவை தீவிரவாத செயலாக அடையாளப்படுத்தப்படுவது மட்டுமின்றி இதனை அடியோடு அழிப்பதற்கான தண்டனைகளும் மிக கடுமையாக வழங்கப்படுகின்றது.மேலும் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட ஏதேனும் அரசியல் நோக்கத்திற்காக அல்லது ஏதேனும் கருத்துறுவாக்கத்திற்காக அல்லது மத நோக்கத்திற்காக அல்லது வேறு ஏதேனும் சுய நோக்கத்திற்காகவே நடத்தப்படுவதாகவே நம்மால் காண முடிகிறது.

ஆக மேற்கூறியது போன்ற பொது மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் தாக்குதல்கள் அல்லது அமைதியான ஒரு மக்கள் ஆட்சியை குழைக்கும் விதமான தாக்குதல்கள் என்பது அடியோடு அழிக்கப்பட வேண்டிய அம்சம்தான் என்பதில் நம்மில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்றே நான் நம்புகின்றேன்.இன்னும் இத்தகைய தீவிரவாதங்கள் வேரறுக்கப்பட வேண்டியதுதான் எனபதிலும் நம்மிடம் எவ்வித ஆட்சியேபனையும் இருக்காது என்றும் கருதுகின்றேன்.

மேற்கூறப்பட்ட உண்மையான தீவிரவாதம் ஒருபுறமிருக்க மக்கள் புரட்சி என்றும், மண்ணிற்கான போராட்டம் என்றும், ஆங்காங்கே காணப்படுகிறதே இவற்றிற்காக போராடுபவர்களும் தீவிரவாதிகள்தானா?இப்படி சொந்த மக்களுக்காகவோ அல்லது சொந்த மண்ணிற்காகவோ போராடுவது என்பது தீவிரவாதமாகுமா?என்ற கேள்வி நம்மில் ஒவ்வொருவருக்குள்ளும் அவ்வப்பொழுது தோன்றி மறையலாம்.பெரும்பாலோர் நமக்கெதற்கு வம்பு! யாரோ போராடுகிறார்கள்,யாரோ தாக்குதல் தொடுக்கிறார்கள், யாரோ சாவுகின்றார்கள் என்று நமக்குள் எழும் அக்கேள்விகளை சற்று தூரம் வைத்துவிட்டு நம்முடைய வாழ்வாதாரத்தை தேடி விரைந்தும் இருக்கலாம்.

ஆனால் என்னுடைய இந்த கட்டுரையின் மையப்பகுதியே அதற்கான பதிலை தேடுவதுதான் என்பதால்,மக்கள் புரட்சி எப்படி தோன்றுகின்றது என்பது சம்மந்தமாகவும் அதனை செயல்படுத்துபவர்கள் எப்படி தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது சம்மந்தமாகவும் விரிவாக பார்த்துவிடுவோம் வாருங்கள்.இதற்கு எடுத்துக்காட்டாக இந்திய மக்கள் புரட்சியை இங்கு நான் சுட்டிக்காட்டுவதே மிக உங்கந்ததாக கருதுகின்றேன்.

இந்திய மக்கள் புரட்சியும் பிரிட்டிஷ் காலணி ஆதிக்கமும்:

இந்தியாவில் கிட்டதட்ட முழுமையாக 200 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷின் காலணி ஆதிக்கம் தலைவிரித்தாடியது என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம்.அந்த 200 ஆண்டு காலத்தை இப்பொழுதும் இந்தியாவின் "இருண்ட காலம்" என்பதாகவே இந்திய வரலாற்று ஆசிரியிர்கள் விவரிக்கின்றார்கள்.அந்தளவிற்கு சொல்லனா துன்பம் தொண்டையை துழைத்தெடுத்தது.பிரிட்டிஷார்கள் இங்கு கிடைத்த வழங்கள் அத்துனையையும் சூரையாடி தங்கள் நாட்டிற்கு கொண்டு சேர்த்தார்கள்.எதற்கு என்று கேட்ட பூர்வகுடி மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தார்கள். உழைக்கும் அப்பாவி மக்கள் மீது வரிக்கு மேல் வரி விதித்து வயிற்று பிழைப்பிற்கே வழியின்றி வாட்டி வதைத்தார்கள்.இத்துனை அக்கிரமங்களையும் அராஜஹங்களையும் அரசு என்ற பெயரில்தான் அரங்கேற்றினார்கள் என்பதுதான் காலத்தின் கொடுமை.

இவற்றையெல்லாம் கேட்க நாதியற்றுக் கிடந்தாலும் தங்கள் சொந்த பூமியையும் சொந்த மக்களின் மானத்தையும் காக்கும் தெய்வங்களாக அவ்வப்பொழுது சில மக்கள் புரட்சியாளர்கள் ஆங்காங்கே தோன்றி கொண்டேதான் இருந்தார்கள்.அவர்களில் ஆயுதம் தாங்கி போராடியவர்களும் உண்டு,அறத்தை தாங்கி பேனா பிடித்தவர்களும் உண்டு, உணர்ச்சி ஊட்டி கவிதை பாடியவர்களும் உண்டு.ஆனால் இத்தனை போராட்டங்களும் ஆங்கிலேயர்களால் தேச துரோகமாகவும் அரசுக்கெதிரான பயங்கரவாதமாகவும்,ஆட்சிக்கெதிரான தீவிரவாதமாகவுமே அடையாளப்படுத்தப்பட்டது.

அதனால் போராடிய அத்துனை மக்களின் மார்பகங்களும் ஆங்கிலேய பீரங்கி குண்டுகளுக்கு சோதனை ஓட்டமானது.(ஜாலியன் வாலாபாக் என்னும் அங்கிலேயே படுகொலை இதற்கு பெரும் சாட்சி.)தங்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய கரங்கள் மட்டுமின்றி கழுத்துகளும் கழுவில் ஏற்றப்பட்டது.அத்தோடு விட்டார்களா அந்த சண்டாளர்கள்.! தங்களை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்பதை காட்டுவதற்காக வழி நெடுகிழும் உள்ள மரங்கள் தோறும் காஷ்மீர் முதல் கண்ணியாகுமரி வரை அந்த பிணங்களை தொங்கவிட்டு ரசித்தார்கள்.இப்படி கேட்பாரற்று தொங்கவிடப்பட்ட அந்த மனித உடல்களை பிணம் திண்ணி கழுகுகளுக்கும், அண்டங்காக்கைகளுக்கும் விருந்தாக்கி மகிழ்ந்தார்கள் என்பதாகவே நம்மால் இந்திய சுதந்திர வரலாற்றின் இரத்தம் படிந்த காகிதங்களை புறட்டிப்பார்க்க முடிகிறது.

(இங்கு ஆங்கிலேய காலணி ஆதிக்கத்திற்கு எதிரான இந்தியாவின் சிப்பாய் கலக போராட்டம் தொடங்கி உப்பு சத்தியா கிரகம் வரையிலும் அத்துனையையும் உங்கள் கண் முன்னே கொண்டு வர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்றாலும் அவை அனைத்தையும் இங்கு பதிவு செய்தால் இந்த கட்டுரை மிக நீண்ட நெடியதாகிவிடும் என்பதால் மட்டுமே அதனை இங்கு பதிவு செய்யாமல் விடுகின்றேன் என்பதை உங்கள் மேலான கவனத்திற்கு தருகின்றேன்.(இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற பெயரில் ஒரு பெரும் வரலாற்று புத்தகம் தொகுத்து வருகின்றேன். அவற்றில் அனைத்தையும் மிக விரிவாக பதிவு செய்து வருகின்றேன்.அவற்றில் நீங்கள் இது சம்மந்தமாக மிக விரிவாக தெரிந்து கொள்ளலாம்.)

ஆக மேலே நான் சுட்டிக்காட்ட வந்த விஷயம் என்னவென்றால் அப்பாவி மக்களுக்கெதிரான அடக்குமுறையும், அதிகார துஷ்பிரயோகமும் அரசு என்ற பெயரிலும் ஆட்சி என்ற பெயரிலும் நமது தேசத்திலேயே வரம்பு மீறி நடந்தேறி வந்திருக்கின்றது என்பதும் மேலும் தற்பொழுதும் அதுபோன்ற கொடுமைகள் சில நாடுகளில் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றது என்பதுமேயாகும்.இத்தகைய அரச பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் என்று எடுத்துப்பார்ப்போமேயானால் பட்டியல் நீண்ட நெடியதாகவே காணப்படுகின்றது.அதாவது அரசு என்ற பெயரில் பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தின் கீழ் கிட்டதட்ட 58 நாடுகள் சூரையாடப்பட்டதாக நம்மால் அதிகாரப்பூர்வ தரவுகளின் மூலம் காண முடிகிறது.

அவற்றில் இந்தியா போன்ற சில நாடுகள் பெரும் உயிர் தியாங்கங்களுக்கு பிறகும் தேச துரோக சித்தரவதைகளுக்குப் பிறகும் சுதந்திரம் பெற்றது என்றே காண முடிகிறது.ஆனால் தற்பொழுதும் ஜனநாயகம் என்ற பெயரில் அத்தகைய காலணி ஆதிக்கத்தின் கழுகு பார்வைக்கு கீழ்தான் இந்தியா போன்ற பல நாடுகள் ஆட்சி நடத்திக்கொண்டு வருகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாக பதிவு செய்துகொள்கின்றேன்.

அரச பயங்கரவாதம்:

பொதுப்படையில் கூறினால் நீண்ட நெடிய காலமாக இந்த உலகம் முழுவதும் பல்வேறு கொடுங்கோல் ஆட்சியாளர்களால் எண்ணற்ற அதிகார துஷ்பிரயோகங்களும் அரச பயங்கரவாதங்களும் ஒரு நாட்டின் மொத்த குடிமக்களின் மீதும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது என்ற பேருண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.அவ்வாறே அத்தகைய அரச பயங்கரவாதங்கள் அனைத்தும் பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகளாகவும் அவற்றிற்கு எதிராக போராடிய மக்கள் தேச துரோகிகளாகவும்,பயங்கரவாதிகளாகவும்,தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்ற பேருண்மையையும் ஏற்றுக்கொள்ள கடமைபட்டிருக்கின்றோம் என்பதையே இந்த கட்டுரையின் மைய நோக்கமாக இங்கு நான் பதிவு செய்து கொள்கின்றேன்.

அதாவது அதிபயங்கர தீவிரவாதம் ஒன்று அரசு என்ற கொடைக்கு கீழும் நம்மிடம் ஒளிந்திருக்கின்றது என்ற பேருண்மையை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும்.இதனை நாம் புரிந்து கொள்ளாத வரை நமக்கு மக்களுக்காக போராடும் போராளிகளுக்கும், அதிகார மமதையில் மக்களை சுரண்டி பிழைக்க நினைக்கும் தீவிரவாதிகளுக்குமான வித்தியாசம் ஒருபோதும் விளங்காது என்பதே எனது தீர்க்கமான பார்வையாகும்.மேலும் இத்தகைய பார்வையை அடிப்படையாகக் கொண்டே இன்றைய பாலஸ்தீனிய ஹம்மாஸ் அமைப்பினரை அனுக வேண்டும் என்பர்க்ய்ம் எனது கண்ணோட்டமாகும்.இந்த கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே ஹம்மாஸ் அமைப்பினர் பார்க்கப்பட வேண்டிய இடத்தில் இருக்கின்றார்கள் என்பதும் எனது நிலைப்பாடாகும்.

(குறிப்பு:இங்கு நான் ஹம்மாஸ் அமைபினருக்கு ஆதரவாக அல்லது  அவர்களுக்கு சார்பாக எழுதுகின்றேன் என்று ஒருபோதும் எண்ண வேண்டாம்.என் பேனா எப்பொழுதும் அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக பேச வேண்டும் என்பதை மட்டுமே உயிர் மூச்சாக கொண்டது.ஒருவேலை பிற்காலத்தில் இஸ்ரேலியர்களை இனப்படுகொலை செய்ய யாராவது நினைத்தால் அத்தகைய மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் என் பேனா பேசும் என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நிகழ்கால நிகழ்வுகளை காணும்பொழுது என்னைபொறுத்த மட்டில் இருவரும் மனித நாசத்தை உண்டாக்கும் தீவிரவாதிகள்தான் என்பதை உங்கள் மேலான கவனத்திற்கும் தருகின்றேன்.)

என் பார்வையில் இஸ்ரேல் ஹம்மாஸ் இருவரும் தீவிரவாதிகளே:

ஒருபுறம் காஸா என்ற பாலஸ்தீனிய நகரின் மீது கண்களை மூடிக்கொண்டு கண்மூடித்தனமாக அதிபயங்கர குண்டுகளை வீசி அந்த நகரம் முழுவதையும் குப்பை மேடுகளாக மாற்றுவோம் என்றும் அதனை நரகமாக ஆக்குவோம் என்றும் கூறும் இஸ்ரேலிய சியோனிஸ்டுகள்.

மற்றொருபுறம் தங்களையும் தங்கள் நிலங்களையும் அநியாயமாக அபகரித்து தங்களை அகதிகளாக தெருவில் நிறுத்தி சித்திரவதை செய்யும் இஸ்ரேலிய சியோனிஸ்டுகளை அடியோடு அழிக்காமல் ஓயமாட்டோம் என்று கூறும் பாலஸ்தீனிய ஹம்மாஸ் அமைப்பினர்கள்.

இருவரின் நோக்கமும் ஒருவரை ஒருவர் அடியோடு அழிப்பதுதான் என்பதை காணும் பொழுது, என்னைப்பொறுத்தமட்டில் இருவருமே அதிபயங்கர தீவிரவாதிகள்தான் என்பதை இங்கு நான் பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன்.ஏனெனில் இருவரும் தங்களை தாக்குவதாக சொல்லிக்கொண்டு அப்பாவி மக்களையும் குழந்தைகளையுமே கொன்று குவிக்கின்றார்கள் என்பதை களத்தில் நம்மால் நேரடியாக காண முடிகிறது.எனவே இவர்களில் யாரும் யாரையும் தீவிரவாதிகள் என்று சொல்வதற்கு எவ்வித யோக்கியதையும் அற்றவர்கள் என்றே கூறலாம் என்றே கருதுகின்றேன்.

ஆனால் இவற்றில் ஆட்பலமும்,அதிகார பலமும்,சற்று அதிகமாக இருப்பதாக இறுமாப்பு கொண்டிருக்கும் இஸ்ரேல் தாங்கள்தான் இந்த உலகத்திலேயே உத்தமபுத்திரர்கள் என்பதைப்போன்றும் தங்களை காட்டிலும் இந்த உலகில் பரிசுத்தவான்கள் யாருமில்லை என்பதைப்போன்றும் காட்ட முயல்வதோடு; தனக்கு அடைக்கலம் கொடுத்த மக்கள் தற்பொழுது ஆயுதமேந்தி எதிர்க்க தயாராகிவிட்டார்கள் என்பதற்காக; உலக நாடுகளெல்லாம் தங்களின் கொடூரமிகு மனித உரிமை மீறல்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றும்,அதேவேலையில் அரேபிய பாலஸ்தீன மக்களுக்காக போராடும் ஹம்மாஸ் என்ற ஆயுதக்குழுவினரை தீவிரவாதிகள் என்று பிரகடணப்படுத்த வேண்டும் என்றும் கதறுவது, உண்மையில் அரசியல் உலகில் பெரும் நகைப்பாகவே காணப்படுகின்றது.

கிட்டதட்ட (1948 யில்) இஸ்ரேல் என்ற நாடு உறுவானதாக அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி இன்று வரை பலி தீர்ப்பு என்ற பெயரிலும்,உளவு வேலை என்ற பெயரிலும்,உலக அரசியலில் இவர்கள் போட்ட ஆட்டங்களும், அட்டகாசங்களும் ஒன்றிரண்டு அல்ல என்பதாகவே என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும்.இவர்கள் தங்களை தாங்களே பெரும் அறிவாளிகள் என்று இறுமாப்புக்கொண்டு இன்று வரைக்கும் செய்யாத கொலைகள் இல்லை,கடத்தாத நபர்கள் இல்லை,அடிக்காத கொள்ளைகள் இல்லை.உலகில் உள்ள அத்துனை குற்றங்களுக்கும் ஒரு பெயர் சூட்ட வேண்டுமானால் அதற்கு இவர்களின் (உளவு)குப்பை பொறுக்கும் கூலிப்படையான மொசாட் என்பதே சரியாக அமையும் என்று நான் கருதுகின்றேன்.அந்தளவிற்கு இவர்கள் சர்வதேச தீவிரவாதிகள் என்பதே நிதர்சன உண்மையாக நான் காண்கின்றேன்.

மேலும் இந்த சர்வதேச கூழிப்படைக்காரர்கள் குறிப்பாக அமெரிக்கா என்ற குற்றப்பங்காளிகளுக்கு எப்பொழுதும் எடுபுடியாகவே செயல்பட்டு வருபவர்கள் என்பதையும் கூடுதல் செய்தியாக இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன்.உண்மையில் இந்த இரண்டு சர்வதேச ரவுடிகளும் இந்த உலகையே தங்கள் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அதிகார போதைக்காக இந்த உலகில் ஓட்டிய ரத்தங்கள் கடலையும் கடந்துவிடக்கூடியதாகவே காணப்படுகின்றது.அப்படி இவர்கள் ஓட்டிய அத்துனை இரத்தங்களும் தீவிரவாத முத்திரையில்தான் இருந்தது என்பதுதான் மிகப்பெரும் வெட்கக்கேடு.

இதற்கு உதாரணமாக சதாம் உசேன் என்ற ஈராக் அதிபர் கொல்லப்பட்டதின் பிண்ணனியை நீங்கள் எடுத்துப்பார்க்கலாம்.மோப்பம் பிடிப்பதையே பிழைப்பாக கொண்ட இந்த சர்வதேச பயங்கரவாதிகளான இஸ்ரேலிய மொசாட் தனக்கு பக்கத்தில் இருக்கும் சதாமை கண்டு அஞ்சியதால் தன் குற்றப் பங்காளியான அமெரிகாவிடம் சென்று சதாம் அனுகுண்டு தயாரிப்பதாக உளவு கூறி அவரை கொலை செய்ய திட்டமிட்டு இறுதியில் அதை தூக்கின் மூலம் நிறைவேற்றியும் கொண்டார்கள்.

வெளிப்படையாக கூறவேண்டுமானால் இந்த இரண்டு இரத்தக் காட்டேரிகளும் யாருடைய இரத்தத்தையாவது குடிக்க ஆசைப்பட்டுவிட்டால் அதனை எப்பாடுபட்டாவது குடித்துவிடுவார்கள் என்பதுதான் நிதர்சனம். இப்பொழுது ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களின் இரத்தங்களையும் குடிப்பதற்கும் அவர்களின் மீதி நிலங்களை சூரையாடுவதற்கும் திட்டம் தீட்டிவிட்டார்கள்.எனவே அதற்கான ஒரே வழி தீவிரவாதத்தை வேரோடு அழிக்கப்போகின்றோம் என்பது மட்டும்தான்.எனவே அதே பழைய புராணத்தை தங்களின் ஊனமுற்ற ஊடகங்களால் ஊழையிட கட்டளையிட்டு அதற்கு அவர்களின் ஊடகங்களும் தங்களின் எஜமானர்களின் எழும்பு துண்டுகளுக்காக துடித்து துடித்து குறைத்து வருகிறார்கள்.

அது மட்டுமின்றி ஏனைய நாடுகளும் ஹம்மாஸ் அமைப்பினரை தீவிரவாதிகள் என்று பிரகடணப்படுத்த வேண்டும் என்றும் கெஞ்சிக் கொண்டுமிருக்கின்றார்கள் என்பதையும் இங்கு வெளிப்படையாகவே பதிவு செய்து கொண்டு இந்த கட்டுரையின் முடிவுரைக்கு வருகின்றேன்.

முடிவுரை:

பொது பார்வையில் ஹம்மாஸ் அமைப்பினர் பாலஸ்தீன விடுதலை போராளிகளே:

நிதர்சனம் என்னவென்றால் ஹம்மாஸ் அமைப்பினர் இதற்கு முன்பு சர்வதேச சட்டங்களை மதித்துதான் காசாவில் ஆட்சி செய்து வந்திருக்கின்றார்கள் என்றே நம்மால் காண முடிகிறது.இன்னும் ஒருபடி மேலே கூறினால் காசா என்ற பகுதியிள் உள்ள கிட்டதட்ட 22 லட்சம் மக்களின் பிரதிநிதிகளாக தேர்தல் மூலமே இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும். 

அதனால்தான் ஹம்மாஸ் அமைப்பினரை பிரிட்டன் பிபிசி ஊடகம் ஏன் தீவிரவாதிகள் என்று கூறுவதில்லை என்று கேட்ட பொழுது அவர்கள் ஜனநாயக ரீதியில் காசா பகுதி மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதலை குழு என்பதாகவும் மேலும் அவர்கள் ஐநாவாலோ அல்லது சர்வதேச நாடுகளாலோ தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படவில்லை என்றும் விளக்கமளித்து அவர்களை ஹம்மாஸ் ஆயுதக்குழு என்பதாகவே இப்பொழுது வரை செய்தி வெளியிட்டும் வருகின்றனர்.

அவ்வாறே பாலஸ்தீனிய விடுதலையை விரும்பும் மேலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அத்துமீறலை கண்டிக்கும் பல்வேறு சர்வதேச நாடுகளும் குறிப்பாக ரஷ்யா,சைனா,இந்தியா,போன்ற நாடுகள் அந்த பாலஸ்தீனிய மக்களுக்கு தனி நாடு என்ற சுதந்திரம் வழங்கப்படுவதுதான் இதற்கான தீர்வாக அமையுமே தவிர,ஒட்டு மொத்த மக்களையும் தீவிரவாத முத்திரை குத்தி அழித்தொழிக்க நினைப்பது என்பது ஒருபோதும் தீர்வாகாது என்றே வலியுறுத்தி வருகின்றனர்.அதுமட்டுமின்றி இதனையே முந்தைய அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இன்னும் பல்வேறு மனித நேய மாண்பாளர்களும் கூறிவருகின்றார்கள் என்றே நம்மால் காண முடிகிறது.

ஆக அந்த அப்பாவி பொது மக்களை சிறையில் அடைத்து சித்திரவதைகள் செய்வதையும், அவ்வப்பொழுது அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து விளையாடுவதையும் வழக்கமாக கொண்ட இஸ்ரேலும் அமெரிக்காவும் அவர்கள் செய்யும் மனித உரிமை மீறல்களை எந்த மனித நேய மான்பு கொண்ட மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே எனது இந்த கட்டுரையின் ஊடாக நான் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் இரத்த வெறியும், அடக்கியாளும் ஆணவமும்,உலகையே ஆள வேண்டும் என்ற பேராசையும் கொண்டு அப்பாவி பொதுமக்களை தீவிரவாத முத்திரையில் அழித்தொழிக்க நினைக்கும் விஷயத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் தங்களை மறுபரிசீலனை செய்ய கடமைபட்டிருக்கின்றார்கள் என்பதையும் எனது தீர்க்கமான கண்ணோட்டமாக இங்கு நான் பதிவு செய்துகொண்டு இறுதியாக இந்த பூமியில் அமைதி நிலவவும் மக்கள் நிம்மதியுற்று வாழவும் எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் அருள் புரிவானாக என்று பிரார்த்தித்துக்கொள்கின்றேன்.


நன்றி: 

Written By:A.Sadam husain hasani


(குறிப்பு: இந்த கட்டுரையில் ஹம்மாஸ் போராளிகள் மற்றும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் சார்ந்து வெளிப்படையாக அறியப்பட்ட விளக்கங்களையே பதிவு செய்திருக்கின்றேன்.இவற்றில் உங்கள் மேலான கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்.)

(இறைவன் நாடினால் ஒரு அரசிற்கு எதிராக ஆயுதம் ஏந்துவது சரியாகுமா என்பது சம்மந்தமாக அடுத்த கட்டுரையில் விவரிக்கின்றேன்.)


கருத்துரையிடுக

புதியது பழையவை