காஷ்மீருக்குள் என்னதான் பிரச்சனை? (What is the problem to Kashmir)

 

Written By: A.Sadam husain hasani

முன்னுரை:

மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் மதங்களும் இனங்களும் எப்படி இந்த மனித சமூகத்திற்கு மத்தியில் ஒரு இடைகோட்டு எல்லையாக இந்த மனிதர்களால் கட்டியமைக்கப்பட்டதோ அதனைப்போன்றே இந்த பூமியில் மனிதர்களால் அமைக்கப்பட்ட இடைக்கோடுகளே நாட்டு எல்லைகளுமாகும்.இந்த எல்லைகளுக்காக ஓட்டப்பட்ட இரத்தங்களை கணக்கிட்டுப்பார்த்தால் எண்ணில் அடங்காதவையாக காணப்படுகின்றது.அந்தளவிற்கு தெருவிற்கு ஒரு ராஜா முக்கிற்கு ஒரு மந்திரி என்று மனிதர்களுக்குள் மலிந்து கிடந்த அதிகார போதை இந்த பூமியை சில்லுசில்லாக துண்டாடி கூறுபோட்டுகொண்டேதான் இருந்திருக்கின்றது என்பதை வரலாறு வெட்ட வெளிச்சமாக நமக்கு சான்றுபகர்ந்து கொண்டிருக்கின்றது.

மேற்கூறிய அதே கண்ணோட்டத்தோடுதான் காஷ்மீர் எல்லை பிரச்சணையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.அது ஒரு தனி பிரதேசமா ? அல்லது இந்தியாவின் ஒரு சாதாரண நகரமா? அல்லது இந்தியாவிலேயே சிறப்பு அந்தஸ்துகள் பெற்ற மாநிலமா? அல்லது பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட இருக்கும் பகுதியா என்பதில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் இன்றைக்கும் அங்கு வாழும் மக்களின் மனநிம்மதியை கெடுத்து அவர்களி வாழ்வாதாரங்களை நாசமாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதுதான் நிதர்சனமாகும்.இந்நிலையில் இந்த கட்டுரையில் காஷ்மீருக்கான தனிச்சிறப்பு சட்டம் என்றால் என்ன? என்பதுகுறித்தும் மேலும் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு காஷ்மீர் எப்படி இருந்தது என்பது குறித்தும் சற்று விரிவாக விவரிக்க இருக்கின்றேன்.

நிச்சயம் இந்த கட்டுரை காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சணை என்ன என்பது குறித்தும் மேலும் அவை எவ்வாறு அரசியலாக்கப்படுகின்றது என்பது குறித்தும் மேலும் அதற்கான தீர்வுதான் என்ன என்பது குறித்தும் ஓரளவு தெளிவைதரும் என்றே நம்புகின்றேன்.வாருங்கள் நேரடியாக கட்டுரைக்குள் சென்றுவிடலாம்.

காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சணையை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் நாம் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது காஷ்மீர் எப்படி இருந்தது என்பது குறித்து கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.எனவே இந்த கட்டுரையின் முதற்கட்டமாக "காஷ்மீர் ஆரம்பத்தில் எப்படி இருந்தது என்பது குறித்து பார்த்துவிடுவோம் வாருங்கள்...

காஷ்மீர் ஆரம்பத்தில் எப்படி இருந்தது?

இந்தியாவை பொருத்தமட்டில் சுதந்திர கிட்டதட்ட 565 சமஸ்தானங்களை கொண்டிருந்ததாகவே நம்மால் இந்திய வரலாற்றில் காண முடிகிறது.அதாவது 565 சமஸ்தானங்கள் என்பது கிட்டதட்ட 565 நாடுகளாக பிரித்து தனித்தனி அரசர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்திருக்கின்றது.ஆனால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அவை ஒற்றை நாடாக ஒன்றிய அரசாக திரு. நேருவாலும் திரு.வல்லபாய் பட்டேலாலும் ஒற்றை நாடாக ஒன்றிணைக்கப்பட்டது.இப்படி ஒற்றிணைக்கப்பட்ட சமயம் ஜம்மு மற்றும் காஷ்மீரை ஆட்சி செய்து வந்த அன்றைய ஆட்சியாளர் மஹாராஜா ஹரி சிங் தன்னுடைய நாட்டிற்கு பல்வேறு அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில் கொண்டு தன்னுடைய நாட்டையும் இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டினார்.மேலும் தன்னுடைய பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதை கருத்தில் கொண்டு தங்களுக்கென்று தனிச்சிறப்பு சட்டமும் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.அதனை அன்றைய ஆட்சியாளரான நேருவும் கவர்னரான மௌன்ட்பேட்டனும் ஏற்றுக்கொண்டே ஜம்மு காஷ்மிருக்காக ஆர்டிக்கல் 370 என்ற தனிச்சிறப்பு சட்டத்தை வழங்க ஒப்புக்கொண்டனர்.ஆக இப்படித்தான் இன்றைய இந்தியாவின் எல்லைப்பகுதியாக இருக்கக்கூடிய ஜம்மு கஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதாக நம்மால் வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக காண முடிகிறது.

அடுத்தபடியாக காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது காஷ்மீருக்காக வழங்கப்பட்ட அந்த சிறப்பு அந்தஸ்த்து, அதாவது ஆர்டிகல் 370 யில் என்ன கூறப்பட்டிருந்தது என்பது குறித்து இங்கு பார்ப்பது மிக அவசியம் என்பதால் வாருங்கள் ஆர்டிகல் 370 என்ன கூறுகிறது என்பதை பார்த்துவிடுவோம்.

ஆர்டிகல் 370 யில் என்ன கூறப்படுகிறது?

ஆர்டிகல் 370, 1949 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஷ்மீரிற்கு தனிச்சிறப்பு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது.அதில் பொருளாதரம், பாதுகாப்பு,அயல் நாட்டு விவகாரம், தகவல் பரிமாற்றம் போன்றவற்றை தவிர்த்து வேறு எந்த உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.அதாவது தங்களுக்கென்று தனி இறையாண்மையை பின்பற்றவும் மேலும் நில உடமை போன்ற முக்கிய விஷயங்களில் தாங்களே முழு உரிமை பெற்றவர்களாக இருக்கவும் முழு உரிமை வழங்கியது.இதுவே ஆர்டிகல் 370 யில் ஜம்மு காஷ்மீருக்காக சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அடிப்படைகளாகும்.

இப்பொழுது நீங்கள் கேட்கலாம்!சரி இந்த சிறப்பு அந்தஸ்த்தை இன்றைய பா.ஜ.க அரசு ஏன் நீக்கியது? அப்படி நீக்கியதால் அது என்ன பயன் அடைந்துகொள்ள முயற்சிக்கின்றது?மேலும் இவ்வாறு நீக்கியதால் காஷ்மீர் மக்களுக்கு என்ன உரிமை மீறல் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது என்றும் கேட்கலாம்.எனவே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை பா.ஜ.க ஏன் ரத்து செய்தது என்பது குறித்து முதலில் பார்ப்போம் வாருங்கள்.

ஆர்டிகல் 370 யை பா.ஜ.க ஏன் ரத்து செய்தது?

பா.ஜ.க வை பொறுத்தமட்டில் அது ஒரு மதவாத அரசியல் கட்சி என்றே இந்தியா முழுவதும் கருதப்படுகின்றது.அதன் அடிப்படையில் குறிப்பாக இந்து மத வாக்கு வங்கிகளை உறுவாக்குவதற்காகவே பல்வேறு இடங்களிலும் இந்து மத பற்று அரசியலாலோ அல்லது ஏனைய மத வெறுப்பு அரசியலாலோ தங்களை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு விதமான வாக்குறுதிகளை நாடு முழுவதும் வழங்கி வருகின்றது.அவற்றின் ஒரு பகுதியாகவே முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் பகுதியான ஜம்மு கஷ்மிருக்கான சிறப்பு அந்தஸ்தை தங்களின் ஆட்சியில் நீக்குவதாக வாக்குறுதி வழங்கி அதனை 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவைவில்  நிறைவேற்றவும் செய்தது. "அதாவது மற்ற மாநிலங்களைப் போன்றே காஷ்மிரும் ஒரு சாதாரண மாநிலமாக பார்க்கப்படும் என்றும் காஷ்மிருக்கு வெளியில் உள்ளவர்களும் காஷ்மிரில் நில உரிமை பெறலாம் என்றும் மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள் இரண்டு பிராந்தியங்களாக ஆட்சி செய்யப்படும் என்றும் கூறியது.

இது காஷ்மிருக்கு செய்யும் மிகப்பெரும் நம்பிக்கை துரோகம் என்பதாக அங்குள்ள அரசியல் பிரமுகர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் சுப்ரிம் கோர்டில் வழக்குத் தொடர்ந்தனர்.மேலும் அங்கு ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி இருதரப்பும் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்தன.இதனால் அவர்களில் பலரும் வீட்டு சிறையில் தற்போது வரை அடைக்கப்பட்டுமிருக்கின்றனர்.மேலும் அங்கு குடியரசு தலைவரின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறி தற்போது வரையிலும் அங்கு குடியரசு தலைவரின் ஆட்சியே நடைபெற்றும் வருகிறது.தற்பொழுதும் குடியரசுத்தலைவரை வைத்தே தங்களுக்கு சாதகமான பல்வேறு சட்டங்களையும் நிறைவேற்றியும் கொள்கின்றது.இவ்வாறு செய்வதற்கு சில காரணங்களையும் முன்வைக்கின்றது.அவற்றையும் இங்கு நான் உங்கள் கவனத்திற்கு தருகின்றேன்.

ஆர்டிகல் 370 யை ரத்து செய்ததற்கு பா.ஜ.க கூறும் காரணங்கள்:

1. மத்திய அரசிற்கு தனது ஆட்சிக்கு கீழ் உள்ள பகுதியை பிரிக்கவோ,அல்லது பெயர் மாற்றம் செய்யவோ, அல்லது ஒன்று சேர்க்கவோ உரிமையுள்ளது என்று வாதிடுகின்றது.

2.குடியரசுத்தலைவருக்கு ஆர்டிகல் 370 யை ரத்து செய்யவும் புதிய சட்டங்களை அமல்படுத்தவும் உரிமையுள்ளதாக கூறுகின்றது.

3.காஷ்மீர் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்க அது மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்படுவதே சரியானது என்று வாதிடுகின்றது.

4.பெரும்பாண்மை முஸ்லிம்களால் அங்குள்ள இந்துக்கள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றது.

5.போர் சூழலுக்காக மட்டுமே காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் வழங்கப்பட்டதாகவும் அதற்கு பிறகு அந்த சட்டம் தேவையில்லை என்றும் வாதிடுகின்றது.

இதனை அடிப்படையாக கொண்டே உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் ரத்து நடவடிக்கை செல்லுபடியாகும் என்று கூறியதாக நம்மால் காண முடிகிறது.அப்படி உச்ச நீதிமன்றம் என்ன கூறியது என்பதையும் பார்த்துவிடுவோம் வாருங்கள்.

ஆர்டிகல் 370 சம்மந்தமாக உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறியது?

டிசம்பர் 12-2023 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமியிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக கீழ்வருமாறு தீர்ப்பு வழங்கியது.

1.அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் முழு மாநில அந்தஸ்த்து வழங்க வேண்டும்.

2.குடியரசு தலைவரின் ஆட்சியின்போது மா நிலம் சார்பாக எடுக்கப்பட்ட மத்திய அரசின் முடிவை கேள்வி கேட்க முடியாது.

3."சட்டப்பிரிவு 370 என்பது போர் ஏற்பட்டால் பயன்படும் இடைக்கால விதியேயாகும்.ஏனென்றால் அதன் வாசகத்தைப்பார்த்தால் அது ஒரு தற்காலிக ஏற்பாடுதான் என்பது தெளிவாகிறது.

4.அரசிலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் மற்றும் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மாற்றும் முடிவு செல்லுபடியாகும்.

இப்படி உச்சநீதிமன்றமும் தற்போதைய மத்திய அரசிற்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கிவிட்டது.ஆனால் இதனை காஷ்மீர் மக்களும் அங்குள்ள அரசியல் நிபுனர்களும்  எப்படி பார்க்கின்றார்கள் என்பது குறித்து கட்டாயம் இங்கு நாம் கவனிக்க கடமைபட்டிருக்கின்றோம்.எனவே வாருங்கள் ! காஷ்மீர் குறித்து அங்குள்ள மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதையும் பார்த்துவிடுவோம்.

காஷ்மீர் மக்கள் எதை விரும்புகின்றார்கள்?

தற்போதைய நிலையில் பொதுவாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கல்வி,வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளே வெட்ட வெளிச்சமாக பறிக்கப்பட்டு வரும் நிலையில் காஷ்மீருக்கென்று சிறப்பு சட்டமாக எழுதி வாங்கப்பட்ட ஒன்றை தீடிரென்று ரத்து செய்வதென்பதை அங்குள்ள மக்களும் சரி மக்கள் நலன் விரும்பிகளும் சரி முற்றிலும் ஏமாற்றமடைந்ததாகவே காண்கிறார்கள்.ஏனெனில் காஷ்மீரில் வாழும் மக்கள் தங்களின் வலம்நிறைந்த பூமியால் தன்னாட்சி செய்வதற்கு முழு தகுதியுள்ளதாகவும் நம்புகின்றார்கள்.

எனவே காஷ்மீரை இந்தியாவோடு எவ்வித சிறப்பு சலுகையுமின்றி இணைப்பதால் தங்களின் வளர்ச்சி அரசியலாக்கப்பட்டு தற்போது போன்று சின்னாபின்னமாக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார்கள்.அதாவது யார் ஆட்சி செய்வது என்ற அரசியலால் அங்குள்ள அப்பாவி மக்கள் தங்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகிறார்கள்.இதனால் தங்களின் ஜம்மு காஷ்மீரை ஒரு தனி நாடாகவே விட்டுவிடும்படியும் கேட்டுக்கொள்கிறார்கள்.

ஆனால் இவற்றிற்கு மாறாக இன்றைய மத்திய அரசாங்கம் காஷ்மீரை தனி நாடாக விட்டுவிடால் அங்குள்ள பெரும்பாண்மை முஸ்லிம்களால் அது பாகிஸ்தானுடன் இணைந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள்.இதுவே அங்கு நடைபெறும் பூதாகர பிரச்சணைக்கான ஆணிவேராகவும் இருக்கின்றது.இந்த பிரச்சணைக்கான தீர்வு என்பது மிக கடினமானது என்றாலும் இரு தரப்பினரின் அச்சமும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே என்பதையும் இங்கு நான் பதிவு செய்துகொள்ள கடமைபட்டிருக்கின்றேன்.அப்படியானால் எப்படித்தான் இந்த பிரச்சணைக்கான தீர்வை காண்பது என்று நீங்கள் யோசிக்கலாம்.வாருங்கள் இதற்கான தீர்வு குறித்தும் பார்த்துவிடுவோம்.

முடிவுரை:

இந்த பிரச்சணைக்கான தீர்வுதான் என்ன?

தீர்வு :- கொடுக்கப்பட்ட அதே சிறப்பு அந்தஸ்தை திரும்ப வழங்க வேண்டும். 

காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும்பொழுது எந்த சிறப்பு அந்தஸ்துடன் இணைக்கப்பட்டதோ அதே சிறப்பு அந்தஸ்துடன் தொடர வேண்டும் என்ற அங்குள்ள மக்களின் மனோ நிலைக்கேற்ப நடைமுறைப்படுத்துவதே இதற்கான முதல் தீர்வாக நான் கருதுகின்றேன்.ஏனென்றால் அந்த சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டு கிட்டதட்ட 50 வருடங்கள் தாண்டியும் அங்குள்ள மக்கள் அமைதியாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.மேலும் பாகிஸ்தானுடன் இணைந்துவிட்டதாகவோ அல்லது அதற்கான அச்சுறுத்தலோ பெரியளவில் இல்லை என்பதே நிதர்சனமாகும்.

இதைவிடுத்து அந்த அந்தஸ்தை நீக்க தனக்கு அதிகாரம் உள்ளது என்று மத்தியரசு செயல்படுமேயானால் அங்குள்ள மக்களும் அரசியல் நிலையும் அமைதியற்ற நிலையிலேயே தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பில் மிகப்பெரும் பிரச்சனை ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகின்றேன்.என்வே 1949 யில் எந்த ஒப்பந்தத்துடன் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதோ அதே நிலையை தொடர்வது மட்டுமே இந்த பிரச்சனைக்கான முதல் தீர்வாக நான் நம்புகின்றேன்.மேலும் இதனையே அங்குள்ள மக்களும் விரும்புகின்றார்கள் என்பதையும் கூடுதல் செய்தியாக இங்கு பதிவும் செய்துகொள்கின்றேன்.

அடுத்தபடியாக மத்திய அரசு இப்படி தனிப்பட்ட ரீதியில் ஒரு மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அங்குள்ள பகுதியை இரண்டு பிரதேசமாக பிரித்து அங்குள்ள ஆட்சியாளர்களை வீட்டு சிறையில் வைத்து அரசியல் செய்வதென்பது ஏனைய மாநிலங்களின் உரிமைகளையும் பறித்து அரசியல் செய்வதற்கு கட்டாயம் வழிவகுக்கும் என்பதாக இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் அனைத்தும் கொதித்தெழுந்து குற்றம் சாட்டுவதையும் இன்றைய மத்திய அரசு கருத்தில்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட நான் கடமைபட்டிருக்கின்றேன்.ஏனெனில் இன்றைய மத்திய பா.ஜ.க அரசு குடியரசு தலைவரின் ஆட்சியின் மூலமும் ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்தின் மூலமும் தங்களுக்கு பிடிக்காத மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பதிலும் மேலும் அவற்றிற்கு வழங்க வேண்டிய உரிமையை தடுத்து வைப்பதிலும் வெளிப்படையாக ஈடுபட்டு வருகிறது என்பதே நிதர்சனமாக காணப்படுகின்றது.

இதனை அடிப்படையாக கொண்டே காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகையான ஆர்டிகல் 370 யை மத்திய அரசு நீக்கியதை உச்ச நீதிமன்றமும் தற்பொழுது செல்லுபடியாக்குவது வரலாற்று பிழையாக அமையப்போவதாக பல்வேறு அரசியல் நிபுனர்களும் எச்சரிக்கின்றனர்.பார்க்கலாம் என்னதான் நடக்க இருக்கின்றது என்பதை.அதற்கு மத்தியில் அங்கு வாழும் மக்கள் நிம்மதியுற்று எல்லாவித வழங்களையும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை என்றென்றும் பிரார்த்திக்கின்றேன்.


நன்றி:

Written By: A.Sadam husain hasani 


கருத்துரையிடுக

புதியது பழையவை